Thursday 6 August 2015

மயக்கிய மரப்பசு

சிறு வயதில் பார்த்த ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் , அவர்கள் , அவள் ஒரு தொடர்கதை மனதை லேசாக அந்த  வயதிலேயே அசைத்துப்பார்த்தவை !

பெண்மையை நிலவுக்கும் , மலருக்கும் ஒப்பிட்டப்போது , அவளின் இன்னொரு பரிணாமத்தை பல பெண்களுக்கே காட்டிய கதைகள் எனலாம் !

அப்போது
கிராமத்தில்,  நான்  சந்தித்த ராமாயி வாழ்ந்த ஆண் துணை இல்லா வாழ்க்கை எப்படி சாத்தியம் என்றும் அவர் மகள் சின்னாத்தாள்  கணவர் இறந்துவிட கொழுந்தனையே மணம் முடித்து , அவனும் விட்டுச்சென்றிட அவள் ஒரே பையனுடன் வாழ்ந்த வாழ்க்கையும் , இப்படியும் பெண்கள், அவர் தம் வாழ்கையா என்று  பல முறை சிந்தனை விதைகளை தூவி இருக்கின்றன.

எப்படியும் வாழலாம் என்று சிலர் , இப்படித்தான் வாழ வேண்டும் என்று பலர்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அப்படித்தான் அந்த புத்தகத்தை ஆரம்பித்தேன். நடை நான் பிறப்பதற்கு முந்தைய காலத்தில் அமைந்ததால் முதலில் ஒரு மிரட்டல் , பின் ஆழ்ந்துப்போக செய்தது !

ஒரு கதா பாத்திரம் ஏற்படுத்தும் பாதிப்பும் , பிரமிப்பும் ஒரு நாளேனும் அதைப்படித்தவரது மனதில் வாழ்ந்தால் அது கதாசிரியருக்கான வெற்றி எனலாம்.

இந்த அம்மணி கதாபாத்திரம் ரெண்டு பாகமாக நம் மனதில் வாழ்கிறார் , காலங்கள் மாறினாலும் , காட்சியமைப்புகளை  கண்முன் கொண்டு வருகிறார் ஆசிரியர்.

ஒரு ஆத்மாவின் குரலாக நடை  குழந்தைப்பிராயத்திலிருந்து ஆரம்பிக்கும் கதையாக , மெல்ல ஊர்ந்து வளர்ந்து , முடிக்கிறது .

என்ன நாவல் என்று ஊகிக்க முடிந்ததா ??

தி.ஜானகிராமன் அவர்களது மரப்பசு .

தலைப்பே யோசிக்க வைத்தது , கோவில்களில் வாகனங்கள் பார்க்கலாம் , யானை , குதிரை , காமதேனு இப்படி.. மரத்தில் செய்து , உற்சவக்காலங்களில் புதுப்பொலிவுடன் பவனி வரச்செய்வர் இறையுருவங்களுடன் .

மற்ற நாட்களில் , மண்டபங்களில் காட்சிப்பொருளாக , பிரம்மாண்டமாக  உயிரோ  , உணர்வோ இன்றி ஒரே மாதிரி தோற்றமளிக்கும்.

மரக்கட்டையால் உருவங்கள்  அலங்கரிக்கப்படலாம் உயிருடன் உலாவர முடியாது !

இப்படித்தான் படைக்கப்படிருக்கிறது மரப்பசு கதானாயகி பாத்திரம் !

ரெண்டு பாகங்கள் ! கணையாழியில் தொடராக  வெளியான கதை , தொகுக்கப்பட்டு பிற்காலத்தில் நாவலாக்கப்பட்டிருக்கிறது .

பெண் எழுத்தாளர் ஆணைப்படைப்பதற்கும் , ஆண் எழுத்தாளர் பெண் கதாபாத்திரம் படைப்பதற்குமான வித்யாசம் இதில் அறிய முடிகிறது !

அன்னவாசல்.. புதுக்கோட்டை யை அடுத்த சித்தன்னவாசல் , இதை பூர்வீகமாகக்கொண்ட பிராமணக்குலத்தில் பிறந்தப்பெண் , சிறுவயதில் அவள் பார்த்த மனிதர்கள் , அவர்கள் தம் உணர்வுகள் , அதனால் அவளுக்கேற்பட்ட வெறுப்புகள் என கதையை ஆரம்பிக்கிறார் தி.ஜா அவர்கள். சிரிப்பு , எதற்கெடுத்தாலும் சிரிப்பு , துக்கத்திலும் ஆனந்தத்திலும் .. !

ஸ்பரிசம் , தொடுதல் ஒரு வேட்கையாக ஒரு குணாதிசியமாக படைக்கப்பட்ட அம்மணிக்கதாபாத்திரம் , பெற்றோரைப்பிரிந்து , சித்தப்பா , சித்தி வீட்டில் வளர்ந்துப்படித்து , ஒரு திருமணத்திற்காக தன் தந்தையின் வயதை ஒத்த கோபாலி என்ற கர் நாடக சங்கீத வித்வானை பார்க்கப்போக , அதே ஸ்பரிசம் , சிறு வயதிலே , இசையுடன் அவர் மேல் கொண்ட ஈர்ப்பால் அவ்ருடன் வாழ ஆரம்பிக்கிறார்.

இதில் எந்த விரசமோ , ஆபாசமோ இன்றி அம்மணியாக ஆசிரியர் மாறி சம்பவங்களை கோர்க்கிறார். காட்சியமைப்புகள் விரிகின்றன நம் கண்கள் முன்னே ! 20 வயதுப்பெண் , தியாகய்யர் , சங்கீத மும்மூர்த்திகள் சாட்சியாகக்கொண்டு , 60 வயதுக்காரருடன் காதல் வாழ்க்கை. எத்தனை முரண் !

தெரிந்து வளர்த்த பெரியம்மா , பெரியப்பா அவளைக்கண்டித்து அழைக்க , மறுத்து கோபாலியுடன் சேர்ந்திருத்தல் முதல் பாகமாக எழுதிருக்கிறார்.

தனக்கு உலகில் உள்ள அத்தனை உயிரனத்தையும் ஒரு முறை தொட்டுப்பார்க்க வேண்டும் என்றும் திருமண பந்தத்தை வெறுத்த ஒரு வாழ்வை பெண் வாழ்வதாக அக்காலத்தில் வந்த கதை நிச்சயம் சலசலப்பை உண்டு பண்ணியிருக்கும் என்று படிக்க படிக்க உணர செய்கிறது.

முதல் பாகத்தில் அம்மணியின் ஆரம்பக்கால வாழ்க்கை , ரெண்டாம் பாகத்தில் நடனப்பெண்மணியாக உலகம் முழுவதும் சுற்றித்தீர்த்த 300 ஆண்களை ஸ்பரித்த பெண்ணாக , மது அருந்தும் கம்யூனிசம் பேசும் ஆண் சகவாசம் கொண்ட பெண்ணாக சித்தரிக்கப்படுவது பெண் எழுத்தாளருக்கு சாத்தியமா என்றால் , அது சற்றே ஐயப்பாடான நிலை தான் !

கதாசிரியர் தான் ஆண் என்பதை மற்ற பெண்களை வர்ணிக்கும் போது அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார் .

பல ஆண்களைப்பார்த்தும் , தன்னை விட இளையவனான பட்டாபி என்பவனுடன் உயிருள்ள பெண்ணாக வாழ விரும்புவதாகவும்  , மரப்பசு போல தான் வாழ்ந்ததை விளக்க பச்சையப்பன் , அவன் மனைவி மரகதம்  என்ற ரெண்டு பாத்திரங்கள் கதாசிரியருக்கு கைக்கொடுக்க .. கதையும் முற்றுப் பெறுகிறது !

எத்தனை நுணுக்கமான படைப்பு , பாத்திரங்களின் செதுக்கல்கள் என தேர்ந்த கதை சொல்லியாக கவர்கிறார். தி.ஜா.

படித்ததும் ..கிராமத்து  ராமாயி , சின்னாத்தாள் ,நகரத்து  மணம் புரியா கௌசல்யா , வித்யா டீச்சர்களும் கண் முன் வந்து சென்றனர் . ஆழ்ந்துப்படித்தால் .மீள்வது கடினம் தான்.
மரப்பசு மரபுக்கதையாக மயக்கம் தந்து மனதை ஆள்கிறது !

எனக்கு இக்கதைப்படிக்கும் போதெல்லாம்..விஷூவலாக ஹீரோயினாக நடிகை  லஷ்மி மனக்கண்  வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை !

ரசனை , அந்த கால கட்ட வாழ்க்கை முறை , கதாசிரியரின் கதை சொல்லும் நேர்த்தி அறிய அவசியம் மரப்பசு படிக்கலாம்.

மீண்டும் அடுத்த நாவலுடன் சந்திக்கிறேன்..அடுத்தது நிச்சயம் சரித்திர நாவல் தான் . 

No comments:

Post a Comment